Sunday 11 May 2014

ஜோதிடம் உண்மையா..? விதி உண்டா..?


ஒவ்வொரு மனிதனும் நல்ல பொருளாதார பலத்துடன் சிறப்பாக வாழ வேண்டுமென்றுதான் ஆசைப்படுவார்கள். சராசரி மனிதன் நிலை அதுதான். இது எல்லோராலும் முடிகிறதா..?

தொழில் அல்லது வேலை நினைத்த மாதிரி அமைகிறதா..? அடுத்தவரை பார்த்து நாமும் அப்படி இருக்க வேண்டுமென்று நினைத்து செயல்பட்டு வெற்றி பெற முடியாமல் போவதேன்..? எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒருவரால் நினைத்தபடி வாழ முடியுமா..? எல்லாவித அமைப்புகளுக்கும் ஒரு வரைமுறை உள்ளதுபோல வாழ்க்கை வாழ எதுவுமே இல்லையா..?

மற்றவர்போல் உங்களுக்கும் தன்னம்பிக்கை முயற்சி இல்லாமலா இருக்கிறீர்களா..? ஆத்திகமோ அல்லது நாத்திகமோ நீங்கள் எந்த கொள்கை உடையவராக இருந்தாலும் வெற்றிபெற்ற வாழ்வை வாழத்தான் ஆசைப்படுவீர்கள்.

இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் உங்களின் எண்ணம் ஈடுடேறுவதில்லையே ஏன்..?

ஒரு சிலர் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். நான் நினைத்த மாதிரி நடந்ததென்று எல்லோராலும் சொல்ல முடிவதில்லை. சுலபமான வழிகளில் யாரும் வென்றுவிடுவதில்லைதான். சாதிக்க நினைப்பவன் பெரும் போராட்டத்தை சந்திதே ஆக வேண்டிய கட்டாயம்தான். ஆனால் அதுவும் எல்லோராலும் முடிவதில்லை.

ஏதோ ஒன்று நம்மை இயக்குகிறது. நாம் ஒரு அச்சாணியின் கட்டுப்பாட்டில் இருப்பதுத நமக்கே தெரியாமல் உள்ளது.

ஒவ்வொரு இயக்கமும் ஒரு தலைமையின் கீழ்தான் உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. நல்லதோ-கெட்டதோ எது கலந்தாலும் அது ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும். மாற்றம் எதனால் ஏற்படுகிறது..? புதிய சேர்க்கை புதிய சேர்க்கை, புதிய முயற்சி ஒரு மாற்று வினையை கொண்டு வரும். அது நமக்கு நல்லது செய்யுமா? கெடுதல் செய்யுமா..? என்பது முடிவு வந்த பிறகே தெரியும்.

நீங்கள் நன்கு தமிழ் படிக்க தெரிந்தவரென்றால் நமது இதிகாச புராணங்களை ஒரு முறை படித்து பாருங்கள். ஒரு உண்மை விளங்கும். எல்லா கதைகளிலும் விதி இருப்பதை உணர முடியும்.

மிகப்பெரிய இதிகாசமான இராமயணம்- மகாபாரதம் இரண்டும் விதியின் ரகசியத்தை விலாவாரியாக விவிரப்பதை காணலாம். ஏன் ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறள் தந்த தெய்வ புலவர் திருவள்ளுவ மகான் ஊழ் வினை உண்டு என்பதை ஒரு அதிகாரத்தின் வழி சுட்டி காட்டுவது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஊழ்விலை என்பது விதியாகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் நவீனங்களின் பால் ஆர்க்கப்பட்டு மரபை மறந்து வரலாம். பெற்றோரின் அலட்சியத்தால் ஆன்மீக ஜோதிட சாஸ்திரங்கள் தெரியாமல் மனம் போன போக்கில் வாழலாம். ஆனால் உண்மை மறைக்கப்பட்டு போனதால் சில விபரங்கள் அறியாமல் போய்விடுகிறது. சில சமயங்களில் போலிகளின் பிடியில் சிக்கி ஏமாறும்போது உண்மையை வெறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

ஒரு ஊருக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கும் போது வழி காட்டுவதற்கு அம்பு குறியிட்ட பெயர் வழிகாட்டுவது போல்.. கடலில் செல்லும் கப்பலுக்கு கரையை காட்ட கலங்கரை விளக்கு இருப்பதோல்... விமானம் வழி தவறாமல் செல்வதற்கு திசை காட்டும் கருவி இருப்பதுபோல.. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையை சரியான திசையில் கொண்டு செல்ல ஜோதிடம் அவசியமாகிறது.

நம்பி கெட்டாரில்லை நம்பாமல் வாழ்ந்தாரில்லை என்று சொல்வார்கள். மனித பிறப்பின் ரகசியத்தை அப்பட்டமாக எவராலும் சொல்ல இயலாதுதான். ஆனால் அடிப்படை விபரங்களை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

தன்னை முழுவதும் தியானத்தில் ஈடுபடுத்தி, இறை சக்தியோடு இணைத்து முழு பலத்துடன் எண்ணங்களை ஒரு முகமாக்கி கூவனை மட்டும் இருக்க வைத்து உடலை உருக்கி ஆசைகளை துறந்து தன்னை கடவுளாக மாற்றும் வல்லமை உள்ளவர்கள் யாரோ அவர்கள் மட்டும் சொன்னால் சொன்னபடி நடக்கும். ஒரு காலத்தில் ஜோதிடர்களை தேடி போக வேண்டும். இப்பொழுது அப்படியில்லை.

தெருவுக்கு தெரு ஜோதிடர்களின் விளம்பரம். தொலைக்காட்சிகளில் சொல்ல வேண்டாம். அப்படி ஒரு  வாழ்வை மாற்றி விடுவதாக சவால்விட்டு சம்பாதிக்கிறார்கள். என்னே ஏமாற்று வேலை. யாரும் யாருடைய விதியையும் மாற்றிவிட முடியாது. பொய்யாக விளம்பரம் செய்து போலி வேடம் போடுவதால் பணத்தை இழந்தவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். ஆனால் ஜோதிடம் பொய்யில்லை.

ஜோதிடர்கள்தான் பொய்யர்களாக இருக்கிறார்கள். இந்த உலகத்தில் நல்லவற்றை தேடிபிடிக்கும் திறமை எல்லா வகையிலும் ஒவ்வொருருக்கும் தேவையாக உள்ளது. மிகுந்த பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது.

இன்றைய அவசரயுகத்தில் உடனடியாக ஏதாவது நிவாரண வழி கிடைக்குமாவென்று அலை மோதுகிறாரகள். எந்த நோயும் ஒரே ஒரு மாத்திரையில் அல்லது ஒரு ஊசியில் குணமடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அப்படி எதுவுமே சத்தியமான சாத்தியமாக இருக்காது.

உண்மைக்கு அவசரம் எப்பொழுதுமே உடந்தையாக இருக்காது. சரியான பிறந்த தேதி, மாத வருடம், பிறந்த இடம் கொண்டு துல்லியமாக கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தை முறையாக பல சொல்ல தெரிந்த ஒரு ஜோதிடர் சரியாகவே சொல்வார்.

இதில் ஒரு போதும் தவறு வர வாய்ப்பில்லை. ஜாதகத்தில் பிழை இருந்தால் சொல்லுகிற பலனிலும் பிழை ஏற்படும். ஒருவர் தவறு செய்துவிட்டு மற்றவரை குறை சொல்லும் மனோநிலை நம்மில் பலருக்கும் உள்ளது.

ஏதாவது இலவசமாக கிடைக்குமாவென்று எதிர்பார்க்கும் ஆசையும், ஓசியில் யாராவது பலன் சொல்ல மாட்டார்களாவென எதிர்பார்ப்பும் இருக்கிறது. முதலில் இந்த நிலை மாற வேண்டும். நாம் நம்மை முதலில் சுய ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதற்கொரு முடிவை எட்ட வேண்டும். நல்ல வழியில் பயணிக்க ஆயத்தமாகிடனும். நம்மால் பிறருக்கு எவ்வித துன்பமும் வந்திட கூடாது.

நம்மால் பிறர் மனம் வருந்த வாழ்ந்திட கூடாது. அடுத்தவருக்கு பல்வேறு கெடுதல்களை செய்துவிட்டு எந்த நேரமும் பரிகாமென்றும், விரதம் தரிசனமென்றும் சுற்றுவதால் எவ்வித பலனும் வந்திடாது.

இந்து மதம் மறுபிறப்பு கொள்கையை உடையது. உடலுக்குதான் அழிவு. ஆன்மாவிற்கு இல்லை. இந்த பிரபஞ்சத்தில் ஆன்மா நிலை கொண்டிருக்கும். நமது செய்கைகளின் வகைப்படி நமக்கு தண்டனை அனுபவிக்க இந்த பூமியில் மறுபடி மறுபடி பிறப்பு உருவாகிடும்.

அப்படி பிறப்பு உருவாகும்போது தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத்தான் கர்மவினை என்பார்கள். இதற்குத்தான் விதியென்றும் பெயர். சுலபமான வாழ்க்கை அமையவில்லையென பலர் புலம்புவதை பார்க்கும்போது இவர்கள் அதிகமான பாவ பதிவை பெற்று பிறந்திருப்பது ஜாதகத்தின் வழி தெரியவரும். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என மோன்னோர் செய்த தவறுகளையும் வாரிசுகள் அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  ஏன்..?

யாரோ செய்த தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமா என கேட்கத்தோன்றும். முன்னோர் தேடிய சொத்தில் நமக்கு எப்படி பங்கு உள்ளதோ, அதேபோல் முன்னோர் செய்த பாவத்திலும் பங்கு இருக்கத்தான் செய்யும். அதற்குத்தான் ஒவ்வொருவரும் தனது செயலில் பாவபழி  சேராதவாறு பார்த்து நடக்க வேண்டும். இந்த நமது இந்து மத சாஸ்திரம் மானுட வர்க்கத்தை ஒழுங்குபடுத்த, நேர்மையான வழியில் நடக்க கற்றுக்கொடுத்திருக்கிறது.

எல்லாவித பாடங்களும் நமக்கு வழிகாட்டவே உருவாக்கப்பட்டுள்ளது. நாம்தான் இதை புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கிறோம். நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை பொய்யென்று பேசுவது சரியாகுமா..?

வழிகாட்டிட ஒரு சாஸ்திரம் உண்டென்றால் அது ஜோதிடமாகும். நம்புவது அவரவர் கொள்கை சார்ந்த விஷயமாகும். இந்த கட்டுரையின் நோக்கம் நான் ஒரு ஜோதிடன் என்பதற்காக அல்ல.. இங்கு கூறப்பட்டவை அனுபவ வெளிப்பாடேயன்றி வேறேதுவும் இல்லை...

நம் முகத்தை நாம் பார்க்க ஒரு கண்ணாடி தேவைபடுவதுபோல... எந்த ஊர் எங்குள்ளது என்றறிய ஒரு மேப் உள்ளது போல... எல்லாவற்றுக்கும் ஒரு சாவி தேவையுள்ளது... வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல் உள்ளது. அதை தெளிவுபடுத்திக்கொள்ள ஜோதிடம் அவசியமாகிறது. உங்களின் நல்ல வழி பயணத்திற்கு இது ஒரு அறிமுகமாகும். எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன் பராபரமே..!

- ஆஸ்ட்ரோ சிவம்

Share:

4 comments:

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates